பட்லர் இருக்கும் வரை எந்த இலக்கும் எட்டக்கூடியது தான் - சஞ்சு சாம்சன்!
ஜோஸ் பட்லர் களத்தில் இருக்கும் வரை எந்தவொரு இலக்கும் எட்டகூடிய ஒன்றுதான் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுனில் நரைனின் அதிரடியான சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 223 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக சுனில் நரைன் 109 ரன்களைச் சேர்த்தார்.
Trending
அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மையர், ரோவ்மன் பாவெல் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், இறுதிவரை களத்தில் இருந்த ஜோஸ் பட்லர் சதமடித்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இதையடுத்து அணியின் வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், “இந்த போட்டியில் வெற்றிபெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் இப்போட்டியில் நாங்கள் அடுத்தடுத்து ஆறு விக்கெட்டுகளை இழந்தபோதும், ரோவ்மன் பவல் வந்து இரண்டு சிக்ஸர் அடித்ததும் நாங்கள் இப்போட்டியில் வெல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்தோம். இதுபோன்ற ஒரு வெற்றியைப் பெறுவதற்கு எங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமிருந்தது என நினைக்கிறேன்.
உண்மையிலேயே இந்த போட்டியில் கொல்கத்தா அணி வீரர்களும் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தனர். குறிப்பாக சுனில் நரேன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு இந்த மைதானம் கை கொடுத்தது. இருந்தாலும் ரோவ்மன் பவல் 2 சிக்ஸ் அடிக்க அதன் பின்னர் ஜோஸ் பட்லர் எங்களுக்கு போட்டியையும் முடித்துக் கொடுத்தார். அவர் இதனை கடந்த 6 -7 வருடங்களாகவே செய்து வருகிறார். அவரது இந்த ஆட்டம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒரு தொடக்க ஆட்டக்காரராக, ஜோஸ் உள்ளே நுழைந்தால், அவர் 20ஆவது ஓவர் வரை இருப்பார் என்றால் எந்தவொரு இலக்கும் எட்டகூடிய ஒன்றுதான். அவர் அங்கு தான் எதனையோ சிறப்பாக செய்துவருகிறார்” என்று தெரிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் சீசன் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து தங்கள் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now