
இந்தியாவில் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. அந்தவகையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று நடைபெறும் 19ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து, ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணியிலும் அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணியிலும் இடம்பிடிக்கும் கணிப்பட்ட உத்தேச லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அவர்களுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் போன்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.