
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டியில் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி கிளென் மேக்ஸ்வெல்லின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 241 ரன்களை குவித்தது. இதில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கிளென் மேக்ஸ்வெல் சதமடித்து அசத்தியதுடன் 55 பந்துகளில் 12 பவுண்டரி, 8 சிக்சகள் என 120 ரன்களை விளாசி தள்ளினார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் பாவெல் 63 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 37 ரன்களையும் எடுத்திருந்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது.