
ஐபிஎல் தொடரில் 8ஆவது லீக் போட்டியாக நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் பின்னர் ஆடிய கொல்கத்தா அணி, தோல்வி பயத்தை காட்டிய போதும், இறுதியில் அபார வெற்றி பெற்றது.
அதன்பின் 138 என்ற குறைந்த இலக்குடன் களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர் அஜிங்கியா ரகானே 12 ரன்களுக்கும், வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 26 ரன்களுக்கும், நிதிஷ் ராணா டக் அவுட்டும் ஆகி அதிர்ச்சி தந்தனர். இதனால் கொல்கத்தா அணி 51 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அப்போது களத்திற்கு வந்த ஆண்ரே ரஸ்ஸல், வானவேடிக்கை காட்டினார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடுமாறிய பிட்ச்-ல் ரஸ்ஸல் மட்டும் பஞ்சாப் அணியின் ஒவ்வொரு பந்தையும் துவம்சம் செய்து 26 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் அந்த அணி 14.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது. 31 பந்துகளை சந்தித்த ரஸ்ஸல் 2 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்களுடன் 70 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தார்.