
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வரும் நிலையில், இன்று நடைபெற்றுவரும் 18ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இன்றைய போட்டிக்கான இரு அணியிலும் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முஸ்தஃபிசூர் ரஹ்மான், மதீஷா பதிரனா மற்றும் சமீர் ரிஸ்வி ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மொயீன் அலி, மஹீஷ் தீக்ஷனா மற்றும் முகேஷ் சௌத்ரி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேசமயம் ஹைதராபாத் அணியில் நிதீஷ் குமார் மற்றும் நடராஜன் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தனர்.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் ரச்சின் ரவீந்திரா 12 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ருதுராஜ் கெய்க்வாட்டும் 26 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.