
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ளன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் கேப்டன் பால்பிர்னி 9, ரோஸ் அதிர் 1, ஸ்டீபன் தொஹனி 2 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ஹாரி டெக்டர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அவருடன் இணைந்து விளையாடிய கர்டிஸ் கேம்பர் 27 ரன்களையும், ஜார்ஜ் டக்ரெல் 23 ரன்களையும் அடித்து பங்களித்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹாரி டெக்டர் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெஸ்லி மதவெரே பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு திரும்பினார்.