SA vs IND, 1st ODI: அறிமுக போட்டியில் அசத்திய சாய் சுதர்ஷன்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரில் இரு அணியிம் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்ததுடன், கோப்பையையும் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷன் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் நந்த்ரே பர்கர் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
Trending
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரீஸா ஹென்றிக்ஸ் - டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரீஸா ஹென்றிக்ஸ் மற்றும் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டுசென் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி அர்ஷ்தீப் சிங்கின் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம், ஸோர்ஸியுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 28 ரன்கள் எடுத்திருந்த ஸோர்ஸியின் விக்கெட்டையும் அர்ஷ்தீப் சிங் கைப்பற்றினார். பின்னர் ஐடன் மார்க்ரம் 12 ரன்களுக்கும், அதிரடி வீரர்கள் ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வியான் முல்டர் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய ஆண்டிலே பெஹ்லுக்வாயோ ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் தடுமாறினர். அதேசமயம் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பெஹ்லுக்வாயோ 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 33 ரன்கள் எடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் அர்ஷ்தீப் சிங் தனது 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி 26.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகையும் கைப்பற்ற, குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இதையடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் - சாய் சுதர்ஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து எமாற்றமளித்தார். இதையடுத்து சாய் சுதர்ஷனுடன் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதில் தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய சாய் சுதர்ஷன் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் அறிமுக போட்டியில் அரைசதம் கடந்த முதல் தமிழக வீரர் எனும் சாதனையையும் சாய் சுதர்ஷன் படைத்துள்ளார்.
அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயரும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாய் சுதர்ஷன் 9 பவுண்டரிகளுடன் 55 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 16.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now