-mdl.jpg)
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நேற்று முன்தினம் டர்பன் நகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக டாஸ் கூட போடாமல் இந்த ஆட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இருஅணிகளும் இடையேயான 2ஆவது ஆட்டம் செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு மோதுகின்றன.
இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒருவேளை இன்றைய ஆட்டமும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள டி 20உலகக் கோப்பை தொடருக்கான அணியை கட்டமைப்பதில் இந்திய அணி நிர்வாகத்துக்கு சிக்கல் எழக்கூடும். இன்றைய ஆட்டம் உட்பட உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக மொத்தம் 5 சர்வதேச டி 20 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி பங்கேற்கிறது.
இதில் வரும் ஜனவரி மாதம் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரும் அடங்கும். டி 20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 தொடருக்கு 17 வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு செய்தது. இதில் இளம் வீரர்கள் அதிகமாக சேர்க்கப்பட்டிருந்தனர். தென் ஆப்பிரிக்க மண்ணில் இவர்களது திறனை சோதித்து பார்க்கும் வகையிலேயே பிசிசிஐ திட்டம் வகுத்து இருந்தது.