
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று (நவம்பர் 10) க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அவரைத்தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா பவுண்டரியுடன் இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில், 4 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சூர்யகுமார் யாதவும் 4 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு நடையை கட்ட, இந்திய அணி 15 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த திலக் வர்மா மற்றும் அக்ஸர் படேல் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.