
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணிகாளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து, இந்த டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளன.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று (நவம்பர் 13) செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியிலும் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மீண்டும் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர் ரமந்தீப் சிங் பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்றார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் இணைந்த அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டதுடன், இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் இரண்டாவது விக்கெட்டிற்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 50 ரன்களை எடுத்த கையோடு அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.