
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. எனினும் ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது டெஸ்டை தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், கேப் டவுனில் செவ்வாய் அன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பந்துவீச்சுக்குச் சாதகமான சூழலில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 77.3 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 79 ரன்களும் புஜாரா 43 ரன்களும் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்க அணியில் ரபாடா 4 விக்கெட்டுகளும் மார்கோ ஆன்சென் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 76.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பீட்டர்சன் 72 ரன்கள் எடுத்தார். பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 14, புஜாரா 9 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.