
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று (நவம்பர் 15) ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணை மீண்டும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில் இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். இதன் மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 73 ரன்களைக் கடந்த நிலையில், ஆதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 36 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் கடந்த இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்த சஞ்சு சாம்சன், இப்போட்டியில் 28 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.