
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரில் இரு அணியிம் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்ததுடன், கோப்பையையும் பகிர்ந்துகொண்டனர்.
இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து, 1-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை க்கெபர்ஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஏற்கெனவே முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று முன்னிலை வகிப்பதால் இப்போட்டியையும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது. அதேசமயம் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.