
இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது ஷமி, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்திய ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடர்களில் இருவரும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மூன்று அணிகளுக்கும் வெவ்வெறு கேப்டன்களையும் பிசிசிஐ நியமித்துள்ளது. அதன்படி டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவும், ஒருநாள் தொடருக்கு கேஎல் ராகுலும், டெஸ்ட் தொடருக்கு ரோஹித் சர்மாவும் இந்திய அணியின் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர்களுக்கும் அதிகளவு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.