
தென் ஆபிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய அணி அங்கு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. இதில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் முறையாக தென் ஆபிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.
இந்நிலையில் அத்தொடருக்கு தயாராக தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி பயிற்சி போட்டியில் களமிறங்கியுள்ளது. நேற்று சென்வெஸ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ முதலில் பந்து வீசுவதாக அதை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா ஏ அணி 319 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. குறிப்பாக ரூபின் ஹெர்மன் 95, ஜீன் டு பிளேஸி சதமடித்து 106, கோன்னர் 48 என முக்கிய பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்கள் குவித்ததால் ஒரு கட்டத்தில் 309/5 என்ற நிலைமையில் தென் ஆப்பிரிக்கா ஏ வலுவாக இருந்தது.
அப்போது 95ஆவது ஓவரை வீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஜீன் டு பிளேஸிஸை அவுட்டாக்கி அடுத்ததாக வந்த ஈத்தன் போஸை கோல்டன் டக் அவுட்டாக்கினார். அதை தொடர்ந்து தம்முடைய அடுத்த ஓவரின் முதல் பந்தில் மோடிமொக்கேனை டக் அவுட்டாக்கிய அவர் 3 பந்துகளில் தொடர்ந்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் மூலம் இந்தியா ஏ அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் பவுலர் என்ற மாபெரும் சாதனையையும் பிரசித் கிருஷ்ணா படைத்துள்ளார்.