SA vs SL, 2nd Test: தனஞ்செயா, மெண்டிஸ் அசத்தல்; நெருக்கடியில் தென் அப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி ரியான் ரிக்கெல்டன், கைல் வெர்ரைன் ஆகியோரது சதம் காரணமாக முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக கைல் வெர்ரைன் 105 ரன்களையும், ரியான் ரிக்கெல்டன் 101 ரன்களையும் எடுத்தனர். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணியில் திமுத் கருணரத்னே 20 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 44 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான பதும் நிஷங்கா 89 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 44 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 48 ரன்களை எடுத்த கையோடு கமிந்து மெண்டிஸும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
Trending
பின்னர் களமிறங்கிய கேப்டன் தனஞ்செயா டி சில்வா 14 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 16 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை போராடிய பிரபாத் ஜெயசூர்யா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 328 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய டேன் பீட்டர்சன் 5 விக்கெட்டுகளியும், மார்கோ ஜான்சென், கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 30 ரன்கள் முன்னிலையும் பெற்றது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் அப்பிரிக்க அணியில் டோனி டி ஸோர்ஸி 19 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஐடன் மார்க்ரம் அரைசதம் கடந்த நிலையில், 55 ரன்னிலும், அடுத்து வந்த ரியான் ரிக்கெல்டன் 24 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை ஸ்டப்ஸ் 36 ரன்களுடனும், கேப்டன் டெம்பா பவுமா 48 ரன்களுடனும் தொடர்ந்தனர்.
இதில் கேப்டன் டெம்பா பவுமா தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், மறுப்பக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 47 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் 66 ரன்களில் டெம்பா பவுமாவும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் டேவிட் பெட்டிங்ஹாம் 35 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 317 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனல் இலங்கை அணிக்கு 348 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய அந்த அணியில் திமுத் கருணரத்னே ஒரு ரன்னிலும், பதும் நிஷங்கா 18 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய தினேஷ் சண்டிமால் - ஏஞ்சலோ மேத்யூஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சண்டிமால் 29 ரன்னிலும், அதிரடியாக விளையாட முயற்சித்த ஏஞ்சலோ மேத்யூஸ் 32 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். அவர்களைத்தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமிந்து மெண்டிஸும் 35 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனையடுத்து இணைந்த கேப்டன் தனஞ்செயா டி சில்வ - குசால் மெண்டிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக, 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் தனஞ்செயா டி சில்வா மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் தலா 39 ரன்களுடன் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மஹாராஜ், டேன் பீட்டர்சென் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி நாளை 5ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now