
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி ரியான் ரிக்கெல்டன், கைல் வெர்ரைன் ஆகியோரது சதம் காரணமாக முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக கைல் வெர்ரைன் 105 ரன்களையும், ரியான் ரிக்கெல்டன் 101 ரன்களையும் எடுத்தனர். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணியில் திமுத் கருணரத்னே 20 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 44 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான பதும் நிஷங்கா 89 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஏஞ்சலோ மேத்யூஸ் 40 ரன்களுடனும், கமிந்து மெண்டிஸ் 30 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏஞ்சலோ மேத்யூஸ் 44 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 48 ரன்களை எடுத்த கையோடு கமிந்து மெண்டிஸும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் தனஞ்செயா டி சில்வா 14 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 16 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை போராடிய பிரபாத் ஜெயசூர்யா 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.