எஸ்ஏ20 2024 இறுதிப்போட்டி: ஸ்டப்ஸ், மார்க்ரம் அபார ஆட்டம்; டர்பன் அணிக்கு 205 ரன்கள் இலக்கு!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 205 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இன்றுடன் முடிவடைகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸை வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து அந்த அணிக்கு தொடக்கம் கொடுக்க ஜோர்டன் ஹார்மேன் - டேவிட் மாலன் இணை களத்திற்கு வந்தது. இதில் டேவிட் மாலன் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரீஸ் டாப்லி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து ஹார்மேனுடன் இணைந்த டாம் அபேல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
Trending
இப்போட்டியில் இருவரும் மாறி மாறி பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோர் உயர்ந்ததுடன், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 90 ரன்களை எட்டியது. அதன்பின் அரைசதத்தை நெருங்கி ஜோர்டன் ஹார்மேன் 42 ரன்களில் விக்கெட்டை இழக்க, இப்போட்டியில் அரைசதம் கடந்திருந்த டாம் அபேலும் 55 ரன்கள் எடுத்த நிலையில் கேசவ் மகாராஜின் அதே ஓவரில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இவர்களை பிரிக்கமுடியாமல் எதிரணி பந்துவீச்சாளர்களும் தடுமாற, அதிரடியாக விளையாடி வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.
மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 56 ரன்களையும், கேப்டன் ஐடன் மார்க்ரம் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 42 ரன்களையும் சேர்த்ததுடன் 4ஆவது விக்கெட்டிற்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அடித்து அசத்தினர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 204 ரன்களைக் குவித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now