
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
இதையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்கள் வில் ஜேக்ஸ் ஒரு ரன்னுடன் நடையைக் கட்ட, அவரைத் தொடர்ந்து 12 ரன்களை எடுத்திருந்த பிலிப் சால்ட்டும் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கைல் வெர்ரைன் ஒரு பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ரைலீ ரூஸோவ், காலின் இங்க்ரம், ஜேம்ஸ் நீஷம், கார்பின் போஷ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த கைல் வெர்ரைன் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 72 ரன்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 167 ரன்களைச் சேர்த்தது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் தரப்பில் லிசாத் வில்லியம்ஸ், ரோமாரியோ செப்ஃபர்ட் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் தரப்பில் தொடக்க வீரர்கள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 9 ரன்களுக்கும், ரீஸா ஹென்றிக்ஸ் 4 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.