Advertisement

எஸ்ஏ20 2024: ஜோபர்க்கை மீண்டும் வீழ்த்தியது பார்ல் ராயல்ஸ்!

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 25, 2024 • 11:37 AM
எஸ்ஏ20 2024: ஜோபர்க்கை மீண்டும் வீழ்த்தியது பார்ல் ராயல்ஸ்!
எஸ்ஏ20 2024: ஜோபர்க்கை மீண்டும் வீழ்த்தியது பார்ல் ராயல்ஸ்! (Image Source: Google)
Advertisement

எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பார்ல் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. ஜொஹன்னஸ்பர்க்கிலுள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு வழக்கம் போல் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மீண்டும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபாஃப் டூ பிளெசிஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஹென்றிஸுடன் இணைந்த டூ ப்ளூய் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.

Trending


இதில் 16 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 30 ரன்களை எடுத்த நிலையில் டூ ப்ளூய் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய மகான்யாவும் 15 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த ரீஸா ஹென்றிக்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

இறுதியில் ஹென்றிஸுடன் இணைந்து மொயீன் அலியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அதுவரை தடுமாறிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி, கடைசி இரண்டு ஓவர்களில் மளமளவென சவாலான இலக்கை நோக்கி நகர்ந்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரீஸா ஹென்றிக்ஸ் 7 பவுண்டரி 3 சிக்சர்கள் என 79 ரன்களையும், மொயீன் அலி 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 23 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கைக் கொடுத்தனர். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களைச் சேர்த்து. பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் லுங்கி இங்கிடி, ஃபேபியன் ஆலன், ஆண்டில் பெஹ்லுக்வாயோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இழக்குடன் பார்ல் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. இதில் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் 8 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜோஸ் பட்லரும் 22 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் களமிறமிறங்கிய மிட்செலும் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். 

பின்னர் இணைந்த விஹான் லூப் - தனே விலாஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விஹான் லூப் அரைசதம் கடந்தார். அதனைத்தொடர்ந்து 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 57 ரன்கள் எடுத்த நிலையில் விஹான் லூப் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய தனே விலாஸ் 42 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய ஃபேபியன் ஆலன் 2 சிக்சர்களுடன் 17 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பார்ல் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த தோல்வியின் மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் கனவும் தகர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement