
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மேத்யூ பிரீட்ஸ்கி - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குயின்டன் டி காக் 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான மேத்யூ பிரீட்ஸ்கி 23 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் - ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசென் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், கேன் வில்லியம்சன் 22 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய வியான் முல்டரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட, இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 70 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.