
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜொஹன்னஸ்பர்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு ஸாக் கிரௌலி மற்றும் டேவிட் பெட்டிங்ஹாம் இனை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸாக் கிரௌலி இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டாம் அபெலும் முதல் ஓவரிலேயே ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். ஒருபக்கம் பெடிங்ஹாம் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய ஜோர்டன் ஹார்மன் மற்றும் கேப்டன் ஐடன் மார்க்ரம் ஆகியோரும் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் அந்த அணி 17 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த பெடிங்ஹாம் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், பெடிங்ஹாம் 40 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மார்கோ ஜான்சன் 22 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 37 ரன்களிலும் என தங்கள் விக்கெட்டுகளை இழந்தானர்.