
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ கேப்டவுன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி விளையாடிய கேப்டவுன் அணிக்கு செதிகுல்லா அடல் மற்றும் கானர் எஸ்டெர்ஹுய்சென் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டனர். இதன்மூலம் அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதில் இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 74 ரன்களைச் சேர்த்திருந்த செதிகுல்லா அடல் தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் காலின் இங்க்ரம் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கானர் எஸ்டெர்ஹுய்சென் அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், அவருடன் இணைந்த டெலானோ போட்ஜீட்டரும் அபாரமாக விளையாடி பவுண்டரிகளை விளாசினார். அதன்பின் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கானர் எஸ்டெர்ஹுய்சென் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 69 ரன்களுக்கு ஆட்டமிழக்க, டெலானோ போட்ஜீட்டரும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.