
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் டேவிட் பெடிங்ஹாம் 2 ரன்னிலும், ஸாக் கிரௌலி ஒரு ரன்னிலும், டாம் அபெல் 9 ரன்னிலும், கேப்டன் ஐடன் மார்க்ரம் ரன்கள் ஏதுமின்றியும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 11 ரன்னிலும், பேட்ரிக் க்ரூகர் 10 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 50 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய மார்கோ ஜான்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார்.
பின்னர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்களைச் சேர்த்த நிலையில் மார்கோ ஜான்சன் விக்கெட்டை இழக்க, மற்ற வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரிட்டோரியா கேப்பிட்டல் தரப்பில் டேரின் டுபாவில்லன் 3 விக்கெட்டுகளையும், ஈதன் போஷ், ஜிம்மி நீஷம் மற்றும் செனுரன் முத்துசாமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.