
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கெபெர்ஹாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கி 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய குயின்டன் டி காக், ஜேஜே ஸ்மட்ஸ், வியான் முல்டர், ஹென்ரிச் கிளாசென், கேப்டன் கேசவ் மஹாராஜ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் நிதானமாக விளையாடி வந்த கேன் வில்லியம்சன் 44 ரன்களுக்கு விக்கெட்டினை இழந்த நிலையில், இறுதியில் நவீன் உல் ஹக் அதிரடியாக விளையாடி15 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிர்கு 115 ரன்களை மட்டுமே சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் மார்கோ ஜான்சென், ரிச்சர்ட் க்ளீசன், ஓட்னியல் பார்ட்மேன், லியாம் டௌசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.