
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கெபெர்ஹா உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு ஸாக் கிரௌலி மற்றும் டேவிட் பெட்டிங்ஹாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸாக் கிரௌலி 6 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் பெடிங்ஹாமுடன் இணைந்த டாம் அபெலும் பொறுப்புடன் விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதில் டாம் அபெல் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து பெடிங்ஹாமுடன் இணைந்த கேப்டன் ஐடன் மார்க்ரமும் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுதியதுடன் அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
இப்போட்டியில் நிதானமாக விளையாடிய டேவிட் பெடிங்ஹாம் 37 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஐடன் மார்க்ரம் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - மார்கோ ஜான்சென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை நல்ல ஸ்கோரை நோக்கி அழைத்துச் செல்லும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சில பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினார்.