
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றனர். அதில் ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக், வெஸ்ட் இண்டீஸின் கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தானின் பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேசத்தின் பங்களதேஷ் பிரீமியர் லீக், இலங்கையின் லங்கா பிரீமியர் லீக் என ஒவ்வொரு நாடும் தங்களுக்கென தனி டி20 தொடர்களை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 லீக் தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது. மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளன. அந்தவகையில் எல்எஸ்ஜி அணியின் உரிமையாளர்களுடைய டர்பன் சூபப்ர் ஜெயண்ட்ஸ் அணியும் எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் தொடருக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி எதிர்வரும் எஸ்ஏ 20லீக் தொடருக்கான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனை ஒப்பந்தம் செய்துள்ளது.