
கடந்த 2000ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஆடவர் அண்டர்19 உலக கோப்பையால் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக யுவராஜ் சிங், பென் ஸ்டோக்ஸ், விராட் கோலி போன்ற ஏராளமான வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முன்கூட்டியே அடையாளம் காணப்பட்டு இன்று ஜாம்பவான்களாகவும் ஜொலிக்கிறார்கள். அப்படி வருங்கால இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காட்டும் தொடராக உருவெடுத்த அண்டர்19 உலகக்கோப்பை வெற்றியால் மிகவும் மகிழ்ச்சியடைந்த ஐசிசி அதை இந்த வருடம் மகளிர் கிரிக்கெட்டிலும் அறிமுகப்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஜனவரி 14ஆம் தேதியன்று துவங்கிய வரலாற்றின் முதல் மகளிர் அண்டர்-19 டி20 உலக கோப்பையில் உலகம் முழுவதிலுமிருந்து மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. அதில் ஷஃபாலி வர்மா தலைமையிலான இந்திய மகளிர் அணிலீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்று சூப்பர் 6 சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் இலங்கைக்கு எதிரான முக்கிய போட்டியில் பெரிய வெற்றியை பதிவு செய்து ரன் ரேட் அடிப்படையில் நாக் அவுட் சுற்று தகுதி பெற்றது.
இந்தியா அரையறுதியில் காலம் காலமாக ஆடவர் அணிக்கே சவாலை கொடுத்து வரும் நியூசிலாந்தை தோற்கடித்து ஃபைனலுக்கு முன்னேறியது. அதைத் தொடர்ந்து ஜனவரி 29ஆம் தேதியன்று நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் மிகச் சிறப்பாக ஃபீல்டிங் செய்து பந்து வீச்சில் அற்புதமாக செயல்பட்டு இங்கிலாந்தை 68 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா பின்னர் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.