
தென் ஆப்பிரிக்காவில் மகளிர் அண்டர் 19 டி20 உலகக் கோப்பை தொடர் நடந்தது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன.விறுவிறுப்பாக சென்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அண்டர் 19 மகளிர் அணி 17.1 ஓவர்களில் 68 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அண்டர் 19 மகளிர் அணி 14ஆவது ஓவரில் இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அது மட்டுமின்றி, முதல் முறையாக அண்டர் 19 மகளிர் அணிக்காக நடத்தப்பட்ட டி20 உலகக் கோப்பையை இந்தியா அண்டர் 19 மகளிர் அணி கைப்பற்றி சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக இந்தியா அண்டர் 19 ஆண்கள் அணியும் இதே போன்று முதல் முறையாக நடத்தப்பட்ட டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக தொடங்கப்பட்ட மகளிர் அண்டர் 19 டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய மகளிர் அண்டர் 19 அணி மற்றும் துணை ஊழியர்களுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கபட்டது. உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கிரிக்கெட் பிரபலங்களான ராகுல் டிராவிட், பிரித்வி ஷா ஆகியோர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.