
உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 284 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக குர்பாஸ் 80 ரன்களும், இக்ரம் 58 ரன்களும் சேர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களில் வெறும் 215 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய ஹாரி ப்ரூக் மட்டும் 62 ரன்களை எடுத்தார். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரஷீத் கான் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது நபி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி மொத்தமாக ஸ்பின்னர்களிடம் 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி இருந்தது. அதன்பின் விளையாடிய 14 உலகக்கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வந்த நிலையில், டெல்லியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியையே சம்பவம் செய்து அசத்தியுள்ளது. இரு தரமான வேகப்பந்துவீச்சாளர்கள், 3 தரமான ஸ்பின்னர்கள் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி சாதித்துள்ளது.