
வங்கதேச அணி ஆஃப்கானிஸ்தானுடன் ஐக்கிய அரபு ஆமீரகத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் வங்கதேச அணி அபாரமாக செயல்பட்டதுடன், 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெறவுள்ளது.
அந்தவகையில், இத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 8ஆம் தேதியும், இரண்டாவது ஒருநாள் 11ஆம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி 14ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. இதில் அனைத்து போட்டிகளும் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வங்கதேச அணி டி20 தொடரை வென்ற உத்வேகத்துடனும், ஆஃப்கானிஸ்தான் அணி தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் விளையாடவுள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் இத்தொடருக்கு முன்னதாக ஆஃப்கானிஸ்தான் அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி இத்தொடருக்கான ஆஃப்கான் அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சலீம் சஃபி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணிக்காக ஒரு டெஸ்ட், ஒரு டி20 மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.