வில்லியம்சன்னின் பாராட்டை பெற்ற சாய் சுதர்சன்!
சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சனுக்கு நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி 362 ரன்களை குவித்துள்ளார். குறிப்பாக சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 47 பந்துகளில் 96 ரன்கள் விளாசி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். வில்லியம்சனுக்கு மாற்றாக களமிறக்கப்பட்ட சாய் சுதர்சன் வில்லியம்சன்னிடம் இருந்தே பாராட்டுக்களை பெற்றுள்ளார். இறுதிப்போட்டிக்கு சாய் சுதர்சனுக்கு நியூசிலாந்து நட்சத்திர வீரர் வில்லியம்சன் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து சாய் சுதர்சன் பேசுகையில், “இறுதிப்போட்டி முடிந்து அதிகாலை ஓட்டலுக்கு திரும்பியதும் எனது பேட்டிங்கின் ஹைலெட்சை பலமுறை பார்த்தேன். பதிரானாவின் கடைசி ஓவரில் எக்ஸ்டிரா கவர் திசையில் அடித்த சிக்சர் ஷாட், எனக்கு மிகவும் பிடித்தமான ஷாட்டாக அமைந்தது. எனது செயல்பாடு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இந்த ஐபிஎல் தொடரில் சில ஆட்டங்களில் களம் காண வாய்ப்பு கிடைக்கவில்லை.
Trending
இருப்பினும் அணி நிர்வாகம் எப்போதும் என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தது. நானும் எனது திறமையை வெளிப்படுத்துவதற்கு தயாராக இருந்தேன். இறுதிப்போட்டியில் ஆட்டமிழந்து ஓய்வறை நோக்கி சென்ற போது அணி வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். அந்த தருணத்தை இப்போது நினைத்தாலும் கூஸ்பம்ப்ஸ் வருகிறது.
நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் காயத்தால் முதல் போட்டியிலேயே களமிறங்க முடியவில்லை. இதன் காரணமாகவே வில்லியம்சனின் ரோல் எனக்கு கொடுக்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன் வில்லியம்சனிடம் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், கிரிக்கெட்டை பற்றி பேசுவதற்கும் ஆலோசிப்பதற்கும் எப்போதும் வேண்டுமென்றாலும் அழைக்கலாம் என்று கூறி இருந்தார். அப்போது முதல் இருவரும் பேசி வருகிறோம்.
இறுதிப்போட்டிக்கு பின், "நீ சிறப்பாக விளையாடினாய். உன் ஆட்டத்தால் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று மெசேஜ் அனுப்பினார். அவர் விட்டுச் சென்ற பணியை சிறப்பாக செய்திருக்கிறேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வரும் மாதங்களில் அதிகமாக கற்றுக் கொண்டு, அடுத்த ஆண்டு சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now