
குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் 48 ரன்களையும், கேப்டன் ஷுப்மன் கில் 76 ரன்களையும், அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லரும் 64 ரன்களையும் சேர்த்து அசத்தினர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 224 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெய்தேவ் உனாத்கட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் 48 ரன்களைச் சேர்த்த குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சாய் சுதர்ஷன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிகக்குறைந்த இன்னிங்ஸில் 1500 ரன்களை அடித்த் வீரர் எனும் சாதனையை சாய் சுதர்ஷன் படைத்துள்ளார். முன்னதாக ஷான் மார்ஷ் 36 இன்னிங்ஸில் 1500 ரன்களை எடுத்திருந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது.