
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் இரண்டிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பிலீப் சால்ட் - கேப்டன் ஜோஸ் பட்லர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வில் ஜேக்ஸ் 24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலீப் சால்ட் மீண்டும் சதமடித்து அசத்தியதுடன், 7 பவுண்டரி, 10 சிக்சர்கள் என 119 ரன்களை விளாசினார். அவருடன் இணைந்து விளையாடிய லியாம் லிவிங்ஸ்டோனும் தந்து பங்கிற்கு 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 54 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்களைச் சேர்த்தது. இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது.