
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் இறுதிகட்டத்தில் உள்ளன. அனைத்து அணிகளும் தங்களது தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்ட சூழலில், அவர்களுக்கு மாற்று வீரராக யாரை தேர்வு செய்யலாம் என்ற வியூகங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இதில் மிக முக்கியமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். எம்எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே கடந்தாண்டு மோசமான தோல்விகளால் 9ஆவது இடத்தை பிடித்திருந்தது. எனவே இந்த முறை தோனியின் கடைசி தொடராக இருக்கலாம் என்பதால் எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டும் என பலகட்ட திட்டங்களை தீட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரே ஒரு வீரருக்கு மட்டும் தோனி டிமாண்ட் செய்திருப்பதாக தெரிகிறது. அதாவது சிஎஸ்கேவின் கடைக்குட்டி சிங்கம் என அழைக்கப்பட்ட சாம் கரண் தான் அது. சென்னை அணிக்காக 2020, 2021 ஆகிய சீசன்களில் மொத்தம் 23 போட்டிகளில் விளையாடிய அவர் ஆச்சரியம் தரும் வகையில் 2022ம் ஆண்டு தொடரை புறகணித்தார். ஒரு முக்கிய காரணத்திற்காக இந்தாண்டு கொண்டு வர தோனி திட்டமிட்டுள்ளார்.