
இங்கிலாந்தில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான டி20 பிளாஸ்ட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற சௌத் குரூப் அணிகளுக்கும் இடையேயான போட்டியில் சர்ரே மற்றும் ஹாம்ப்ஷயர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சர்ரே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஹாம்ப்ஷயர் அணிக்கு கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் - பென் மெக்டர்மோட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் மெக்டர்மோட் 11 ரன்களிலும், அடுத்து வந்த டாம் பிரிஸ்ட் 9 ரன்களிலும், வெதர்லி 4 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜேம்ஸ் வின்ஸும் 23 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய டோபி ஆல்பர்ட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் களமிறங்கிய ஹௌல் 13 ரன்களுக்கும், ஜேம்ஸ் ஃபுல்லர் 12 ரன்களுக்கும், லியாம் டௌசன் 19 ரன்களுக்கும், எட்டி ஜேக் 14 ரன்களுக்கும், பிராட் வீல் 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த டோபி ஆல்பர்ட் அரைசதம் கடந்ததுடன், 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 66 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஹாம்ப்ஷயர் அணியானது 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சர்ரே அணி தரப்பில் ஜோர்டன் கிளார்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சர்ரே அணிக்கும் சிறப்பான தொடக்கம் அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் வில் ஜேக்ஸ், லௌரி எவான்ஸ், ரோரி பர்ன்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.