
உலகக்கோப்பை தொடரில் விளையாடும் அத்தனை அணிகளுக்கு பீதியை கொடுத்துள்ளது தரம்சாலா மைதானம். அந்த மைதானத்தில் நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் வீரர்கள் காயமடையாமல் இருந்ததே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தரம்சாலா மைதானத்தின் அவுட் ஃபீல்டு, அதாவது வீரர்கள் ஃபீல்டிங் செய்யும் பகுதியில் புற்களே இல்லாமல் உள்ளது.
வீரர்கள் தரையில் விழுந்து பந்தை பிடிக்க முயற்சி செய்தால், நிச்சயம் காயடைவார்கள். அந்த அளவிற்கு தரம்சாலா மைதானத்தின் அவுட் ஃபீல்டு மோசமாக உள்ளது. ஏற்கனவே ஆஃப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ட்ராட், இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் உள்ளிட்டோர் காட்டமாக விமர்சித்தனர். இதனால் பிசிசிஐ நிர்வாகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று தரம்சாலா மைதானத்தில் இங்கிலாந்து - வங்கதேசம் இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியின் போது பவுலர்கள் ஓடி வந்து பவுலிங் செய்யவே திணறினார்கள்.