AUS vs ENG, 2nd T20I: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-0 என டி20 தொடரை வென்றது.
டி20 உலக கோப்பைக்கு முன், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 2வது டி20 போட்டி இன்று கான்பெராவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் 4 மற்றும் ஜோஸ் பட்லர் 17 ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். அதன்பின்னர் பென் ஸ்டோக்ஸ் 7 மற்றும் ஹாரி ப்ரூக் ஒரு ரன் என இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
Trending
ஆனால் டேவிட் மலான் நிலைத்து நின்று அடித்து ஆடி அரைசதம் அடித்தார். அவருக்கு துணையாக விளையாடிய மொயின் அலியும் 27 பந்தில் 44 ரன்களை விளாசி நல்ல கேமியோ ரோல் பிளே செய்தார். அரைசதம் அடித்த டேவிட் மலான் 49 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 82 ரன்களை குவிக்க, 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 178 ரன்களை குவித்தது.
அதன்பின் 179 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் 4 மற்றும் ஆரோன் ஃபின்ச் 13 ஆகிய இருவரும் சோபிக்கவில்லை. க்ளென் மேக்ஸ்வெல்லும் 8 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் களமிரங்கிய மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 29 பந்தில் 45 ரன்கள் அடித்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 13 பந்தில் 22 ரன்கள் அடித்தார். ஆனால் அவர்கள் களத்தில் நிலைக்கவில்லை. அதன்பின்னர் களமிறங்கிய டிம் டேவிட்டும் 23 பந்தில் 40 ரன்கள் அடித்த நிலையில், அவருக்கு தொடர்ச்சியாக ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே 2 ஷார்ட் பிட்ச் பந்துகளைவீசி, அடுத்த பந்தை யார்க்கராக வீசி ஏய்ப்பு காட்டி வீழ்த்தினார் சாம் கரன்.
கடைசி 2 ஓவர்களை ரீஸ் டாப்ளி மற்றும் சாம் கரன் அருமையாக வீச, ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்களை மட்டுமே அடித்து,8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-0 என டி20 தொடரை வென்றது.
டி20 உலக கோப்பை நடக்கும் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை 2 போட்டிகளில் தொடர்ச்சியாக வீழ்த்தி டி20 தொடரை வென்றுள்ளது இங்கிலாந்து அணி. இதே உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் நம்பிக்கையுடனும் இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பைக்கு செல்லும் நிலையில், ஆஸ்திரேலிய அணி டி20 உலக கோப்பைக்கு முன் இந்த தொடரை இழந்தது அந்த அணிக்கு மரண அடி.
Win Big, Make Your Cricket Tales Now