
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 29ஆவது லீக் போட்டியில் இன்று ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் பலபரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை மட்டுமே குவித்தது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோஹித் சர்மா 87 ரன்களையும், கே.எல் ராகுல் 39 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 49 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது எளிதில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் இந்திய அணியானது ஆறாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியல் முதல் இடத்திற்கு சென்றது.