
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்காஸ் அணியில் தொடக்க வீரர்கள் ரியான் ரிக்கெல்டன் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடைடைக் கட்டினர்.
அதன்பின் இணைந்த குயின்டன் டி காக் மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் அரைசதம் அடித்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்த நிலையில் குயின்டன் டி காக் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெயசூர்யாவும் 31 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹென்ரிச் கிளாசென் 8 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷுபம் ரஞ்சனே 26 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் சியாட்டில் ஆர்காஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. யூனிகார்ன்ஸ் அணி தரப்பில் ஹசன் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய யூனிகார்ன்ஸ் அணிக்கு ஃபின் ஆலென் - மேத்யூ ஷார்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.