
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் - வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு டிராவிஸ் ஹெட் - ஸ்டீவ் ஸ்மித் இணை ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி தங்களது அரைசதங்களை பதிவுசெய்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 56 ரன்களில் டிராவிஸ் ஹெட்டும் ஆட்டமிழந்தார். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திராவும் 2 சிக்ஸர்களுடன் 16 ரன்களை சேர்த்து தனது விக்கெட்டை இழந்தனர். ஆனாலும் அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரிஸ் கஸ் 29 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியானது 15.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களைச் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. அதன்பின், தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டதுடன், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு 14 ஓவர்களில் 177 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய யூனிகார்ன்ஸ் அணியில் ஃபின் ஆலன் ரன்கள் ஏதுமின்றியும், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 18 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தார்.