
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது இன்று டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதனை தொடர்ந்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 7 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 21 ரன்னிலும் அவுட் ஆகினர். ஆனால் இப்போட்டியொல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்ட ச்ஞ்சு சாம்சன் 47 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
இது சஞ்சு சாம்சனின் இரண்டாவது சர்வதேச டி20 சதமாகும். அதன்பின் 7 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 107 ரன்களை எடுத்திருந்த நிலையில் சஞ்சு சாம்சன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 33 ரன்களில் திலக் வர்மாவும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களும் சோபிக்க தவறியதால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.