
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் மோசமான தோல்வியால் வெளியேறிய இந்திய அணி, அடுத்ததாக நியூசிலாந்து தொடருக்கு தயாராகி வருகிறது. இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையில், ராகுல் டிராவிட் கோச்சிங்கில் புதிதாக உருவாக்கப்படும் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று பிசிசிஐ-யால் அறிவிக்கப்பட்டது. அதில், கோலி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் இந்த முறை கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், இஷான் கிஷான் என 3 விக்கெட் கீப்பர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் ஓப்பனிங் செய்ய விரும்புவர்கள். இதே போல ரோஹித், வெங்கடேஷ் ஐயரும் அணியில் உள்ளனர். இதன் காரணமாக நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.