
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கும் வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது நாளை நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்திற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக இந்த ஒருநாள் தொடருக்கான அணியின் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். முதல் ஒருநாள் போட்டியின் போது சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த சஞ்சு சாம்சன் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அரை சதம் அடித்து தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
கடந்த பல ஆண்டுகளாகவே சஞ்சு சாம்சன் ஒரு திறமையான வீரர் என்றும் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆதங்கம் இருந்து வருகிறது, ஆனால் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் தற்போது சஞ்சு சாம்சனுக்கு சீரான இடைவெளியில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து வருகிறது.