
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இடையில் சிறிது காலம் சரிவை சந்தித்திருந்த நிலையில், பாபர் அசாம் தலைமையில் அண்மைக்காலமாக எழுச்சி கண்டுள்ளது. பாபர் அசாம், ரிஸ்வான், அசார் அலி, அபித் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஆசிஃப் அலி என சிறந்த இளம் வீரர்களை கொண்ட அணியாக, சர்வதேச கிரிக்கெட்டில் வலுவான அணியாக வலம்வருகிறது.
மிஸ்பா உல் ஹக் தலைமை பயிற்சியாளராக இருந்தபோது இந்த அணியை செட் செய்தார். அவரது பயிற்சி காலத்தில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டது. ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றதையடுத்து, டி20 உலக கோப்பைக்கு முன்பாக தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து மிஸ்பா உல் ஹக்கும், பவுலிங் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து வக்கார் யூனிஸும் விலகினர்.
இதையடுத்து டி20 உலக கோப்பைக்கு முன்பாக, தற்காலிக பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் சுழல் ஜாம்பவான் சக்லைன் முஷ்டாக் நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் அணி, டி20 உலக கோப்பையில் அரையிறுதி வரை சென்றது.