
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் இந்தியா - இந்தியா ஏ அணிகள் இடையே ஆன பயிற்சி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டி நடைபெற்று வரும் அதே வேளையில், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக களமிறங்க உள்ள இந்திய டெஸ்ட் அணியில் மாற்று வீரராக இடம் பெற்று இருந்த ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்போது அந்த இடம் காலியாக உள்ளது. அந்த இடத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஒருவரை மாற்று வீரராக அணியில் சேர்க்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால், பிசிசிஐ யாரையும் மாற்று வீரராக அறிவிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், பயிற்சிப் போட்டியில் ரோஹித் சர்மா அணிக்கு எதிராக களமிறங்கிய சர்ஃப்ராஸ் கான் டெஸ்ட் போட்டி என்றெல்லாம் பார்க்காமல் கிடைத்த வாய்ப்பில் சதம் அடிக்க வேண்டும் என முடிவு செய்து 61 பந்துகளில் சதம் அடித்து தெறிக்கவிட்டார்.
இதற்கு முன்பும் ஒவ்வொரு முறை டெஸ்ட் அணி தேர்வு செய்யப்படும் போதும் சர்ஃப்ராஸ் கானை டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல் பல ரசிகர்களால் எழுப்பப்படும். அவர் மும்பை மாநில அணிக்காக விளையாடி மிகச் சிறந்த ரெக்கார்டை வைத்து இருக்கிறார். அவரது முதல் தர போட்டிகளுக்கான பேட்டிங் சராசரி 72 ஆகும். ஆனாலும், அவருக்கு இத்தனை காலமாக டெஸ்ட் அணி வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.