
வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகாள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முல்தானில் நடந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 127 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் சௌத் சகீல் மற்றும் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட நொமன் அலி ஆகியோர் தரவரிசையில் டாப் 10 இடங்களுக்குள் நுழைந்து அசத்தியுள்ளனர். அதன்படி பேட்டர்களுகான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் முதலிரண்டு இடங்களை தக்கவைத்துள்ளனர்.
அவர்களைத்தொடர்ந்து நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மூன்றாம் இடத்திலும், இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4ஆம் இடத்தையும், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 5ஆம் இடத்தையும் தக்கவைத்துள்ளனர். இதில் பாகிஸ்தான் அணியின் சௌத் ஷகீல் மூன்று இடங்கள் முன்னேறி 8ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். டெஸ்ட் பேட்டர்களுக்கான இந்த தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள ஒரே பாகிஸ்தான் வீரரும் அவர் மட்டுமே.