
இங்கிலாந்து மகளிர் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியதுடன் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நேற்று தொடங்கியது.
அதன்படி தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கிம்பெர்லியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீராங்கனைகள் சோஃபியா டங்க்லி 4 ரன்னிலும், டாமி பியூமண்ட் 11 ரன்னிலும், நாட் ஸ்கைவர் பிரண்ட் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டேனியல் வையட் 11 ரன்களுக்கும், ஏமி ஜோன்ஸ் 21 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்ட்ன் ஹீத் நைட் 40 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறமிறங்கிய சார்லீ டீன் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 47 ரன்களைச் சேர்த்தார்.