
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை முழுமையாக இந்தியாவில் வைத்து இந்த ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான முழு அட்டவணை சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இறுதிப் போட்டியில் வெளியேறிய நியூசிலாந்து அணிகள் அக்டோபர் 5ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மோதுவதோடு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஆரம்பிக்கிறது.
இதே மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற்று உலகக் கோப்பை தொடர் முடிவடைகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் எட்டாம் தேதி ஆஸ்திரேலியா அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது. இதற்கு அடுத்து அக்டோபர் 11ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
இதற்கடுத்து இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற போட்டியான இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. தற்பொழுது இந்தப் போட்டிக்குதான் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. ஆஃப்கானிஸ்தான் அணியுடன் சென்னையிலும், ஆஸ்திரேலியா அணியுடன் பெங்களூரிலும், இந்திய அணி உடன் குஜராத் அகமதாபாத் மைதானத்திலும் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.