
இந்திய வீரர் விராட் கோலி கடந்த 2019க்குப் பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என எந்த வகையான கிரிக்கெட்டிலும் சதத்தை அடிக்க முடியாமல் தவிப்பதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடந்த பல வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் தனது அபாரமான பேட்டிங் திறமையால் 20,000க்கும் மேற்பட்ட ரன்களையும் 70 சதங்களையும் குவித்து ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வந்த அவர் கடைசியாக கடந்த 2019இல் சதமடித்திருந்தார்.
அந்த நிலையில் யானைக்கும் அடி சறுக்கும் என்ற வகையில் அதன்பின் ஃபார்மை இழந்த அவர் இடையிடையே 30, 50 போன்ற ரன்களை எடுத்தாலும் அனைவரும் அவரை ஃபார்ம் அவுட் என்றே கருதுகின்றனர்.
அந்தளவுக்கு தனக்கென்று ஒரு தரத்தை உருவாக்கி வைத்துள்ள அவர் அதிலிருந்து விடுபடுவதற்காக அழுத்தமான கேப்டன்ஷிப் பொறுப்புகளை படிப்படியாக ராஜினாமா செய்து சாதாரண வீரராக விளையாடும் தொடங்கிய போதிலும் ஐபிஎல் 2022 தொடரில் 3 முறை கோல்டன் டக் அவுட்டானது, கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் 20 ரன்களை கூட தாண்டாது உட்பட முன்பை விட சுமாராக செயல்பட்டு வருகிறார். அதனால் எப்போது சதமடிப்பார் என்று பேசியவர்கள் அணியிலிருந்து நீக்குமாறு கேட்க தொடங்கி விட்டார்கள். குறிப்பாக பெரிய பெயரை வைத்துக் கொண்டு எவ்வளவு நாட்கள் ரன்கள் அடிக்காமல் விளையாடுவீர்கள் என்று ஜாம்பவான் கபில் தேவ் கடுமையாக விமர்சித்திருந்தார்.